.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
சிறப்பு ஆய்வுகள்
 
11789 சிங்களவருடன் மணலாறு முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது வீ.ஆர்.வரதராஜா
Thursday, 07.11.2013, 11:59am (GMT)


மணலாறு ஒரு தமிழ்க்கிராமம். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பாலமாகவும் இக்கிராமம்; திகழ்கின்றது. சுருக்கமாகக் கூறினால் தமிழீழத்தின் இதயமாக போற்றப்படுகின்றது. மணலாறு கிராமத்தை விட்டுக்கொடுத்து தமிழீழம் அமைக்க முடியாது.

அதன் முக்கியத்துவம் உணர்ந்து சிறிலங்கா அரசாஙகம் இக்கிராமத்திற்கு ‘வெலிஓயா’ என்ற சிங்களப் பெயரைச் சூட்டியது. முள்ளிவாய்க்காலின் பின் மணாலாறு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவசர அவசரமாகப் பிரிக்கப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதின் பின் மணலாறு கிராமத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். ஆனால், திடீரென அந்தக் கிராமம் இப்போது முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கிராமம் இப்போது முழுக்க முழுக்க சிங்களக் கிராமமாக மகிந்த அரசினால் மாற்றப்பட்டுள்ளது.

அக்கிராமம் 19 கிராமசேவகர் பிரிவுகளாக விரிவடைந்துள்ளது. மொத்த சனத்தொகை 11789. அனைவரும் சிங்களவர்கள். ஒரு தமிழர்கூட இல்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களுக்கு இல்லாத சகல வசதிகளும் புதிய சிங்களக் கிராமத்துக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

நவீன வீட்டு வசதிகளுடன் சிங்கள மக்கள் மகிந்த அரசினால் குடியேற்றப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு தமிழ்க் குடிப்பரம்பலுடன் இந்தச் சிங்களவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக தீவிர சிங்களக் குடியேற்றம் செய்யப்படும் மகிந்தவின் திட்டத்தின் ஒரு பகுதி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகவே புதிய சிங்களக் கிராமம் பிரித்து வைக்கின்றது. புதிய உதவி அரசாங்க செயலர் பிரிவொன்றும் வெலிஓயா கிராமத்திற்கென்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர் வாழ்ந்த காலத்தில் நான்கு கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டதாக மாத்திரமே அது விளங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்த்திறன் குறித்து உலகமே அறியும். அப்படிப்பட்ட போராளிகளுக்கு சிங்கள இராணுவம் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்று கூறினால், அது மிகப் பெரிய நகைச்சுவையாகவே இருக்க முடியும். ஆனால் சிறிலங்கா அரசு இதனை சகல நாடுகளுக்கும் அறிவித்துள்ளது.

துப்பாக்கி சுடும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக 135 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சிகளிக்கப்படுகின்றது. இவர்களில் மூவர் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்கோலம் பூண்டுவிட்டார்கள் என்றால் துப்பாக்கியை எறிந்துவிட்டு ஓடும் இராணுவம் சொல்கின்றது, புலிகளுக்கு நாம் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம் என்று!

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதைப் போல அவ்வப்போது மகிந்த அரசு சில உண்மைகளைக் கூறி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு சிறிலங்கா இராணுவம் துப்பாக்கி சுடும் பயிற்சியளிக்க வேண்டியதில்லை. ஏனெனில் புலிகளின் குறி எப்போதுமே தவறியதில்லை என்பது வரலாறு.

அப்படியானால் சிறிலங்கா இராணுவம் கூறும் 135 புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ‘முன்னாள் போராளிகள்’ யார்? அவர்கள் நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டப் போரின் பின் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களில் இந்த அப்பாவி இளைஞர்களும் அடங்குவர். பெற்றோரை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு ஆண், பெண் எனப் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்து அழைத்துச் சென்றது.

அவ்வாறு கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானவர்களில் பலர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுவிட்டனர். எஞ்சியிருந்த தொகையினரான சுமார் பன்னிரண்டாயிரம் பேர் வரையிலான இளைஞர்களும் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் தாம் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொய் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர்களே புனர்வாழ்வு என்ற பெயரில் பல அழுத்தங்களுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. புத்த மத போதனை, சிங்கள மொழித் திணிக்கப்படல், சிறிலங்கா தேசிய கீதத்தை ஒரு நாளுக்குப் பத்துத் தடவை சிங்களத்தில் ராகத்துடன் பாடுதல், சிங்களத் தேசிய பழக்கவழக்கங்களை கைக்கொள்ளுதல் போன்றவையே கூடுதலாக புனர்வாழ்வு மையங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

பதினோராயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு தெரிவித்தபோதும் அவர்களில் எவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான எவ்வித ஆதாரமும் சிறிலங்கா அரசினால் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஒரே பொய்யை அந்த அரசு மூன்று வருடங்களாகத் திரும்பத்திரும்பக் கூறி வந்ததினால் தற்போது அதுவே உண்மையென்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் ஊடகங்கள்கூட அவர்களை முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் என்றே தற்போது குறிப்பிடுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இப்போதும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே. அவர்களில் எவரையும் நாம் ‘முன்னாள்’ என்று குறிப்பிட முடியாது. சிறிலங்கா அரசு அவ்வாறு குறிப்பிடுவதன் காரணம் உண்மையில் அவர்கள் அனைவரும் அப்பாவி இளைஞர்கள் என்பது அதற்குத் தெரியும்.

ஆனால், கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் மாத்திரமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களில் தற்போது உயிரோடிருப்பவர் என சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது. அவரை அந்த அரசு ‘முன்னாள்’ என்று குறிப்பிடவில்லையே!

அவரை வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என மகிந்த அரசு கருதுவதாகத் தெரிகின்றது. வடமாகாண தமிழ் மக்கள் இவ்வாறான தேர்தலில் அக்கறை கொள்ளாவிடினும், கே.பி. தேர்தலில் குதித்தால் அவரை மண்கவ்வச் செய்வார்கள் என்பது மாத்திரம் உலகறிந்த உண்மை.

இதேவேளையில், காணி அபகரிப்புக் குறித்து நாடு தழுவிய நிலையில் யாழ்ப்பாணத்தில் மாநாடொன்றைக் கூட்டுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது. அதற்கென ஏற்பாடுகள் பூர்த்தியானதும் மாநாட்டிற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும்.

ஆனால் தமிழர் காணிகளை அபகரிக்கும் மகிந்த அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் தமிழருக்குச் சொந்தமான 26 ஏக்கர் நிலப்பரப்பை தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கிளிநொச்சி காணி, காணி அபிவிருத்தித் திணைக்களத்தைக் கேட்டுள்ளனர்.

அதேநேரத்தில், காணி, காணி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வட மாகாண காணிகளை இராணுவத்தினருக்கு வழங்குமாறு வட மாநில இராணுவத்தினர் அந்தத் திணைக்களத்தைக் கேட்டுள்ளனர். போர் இப்போது இல்லை நாட்டில் சமாதானம் நிலவுகின்றது என்று அரசு கூறினாலும், தமிழர்கள் இப்போதும் போர் நெருக்குவாரங்களுக்குள்ளேயே வாழ்ந்து வருவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்காவிலுள்ள சீனத்தூதுவரை சந்தித்தது ஒரு சம்பிரதாயபூர்வமானதாக இருக்கலாம். ஆனால், அந்தச் சந்திப்பின் பின்வெளியான செய்திகள் பல நாடுகளின் கவனத்தை கவர்ந்துள்ளன. இதனால் கூட்டமைப்பும் பலன் ஏதும் ஏற்படும் என்றும் முதலில் கருதவில்லை.

இருப்பினும், சிறிலங்காவில் எந்தத் தரப்பாயிருந்தும் சீனாவுக்கு இதுவரை எதிர்ப்புக் குரல் எழுப்பப்படவில்லை. ஆனால், முதல் தடவையாக தமிழர் காணிகளை அபகரித்து, அதில் இராணுவமுகாங்களையும் இராணுவக்குடியிருப்புகளையம் கட்டுவதற்கு சீனா பண உதவி செய்வது தமிழ் மக்களுக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றது என சீனத் தூதுவரிடம் கூட்டமைப்பினர் கூறியிருப்பது தமிழர் பிரச்சினையில் சீனாவும் சிறிலங்காவோடு இணைந்து செயற்படுகின்றதென்ற மறைமுகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தமிழர்களின் தற்போதைய அவலங்களை சீனத் தூதுவரிடம் எடுத்துக் கூறிய கூட்டமைப்பினர், சீனாவும் தவறு புரிகின்றது என்பதை நாசூக்காகத் தெரிவித்துள்ளதாகவே வெளிநாட்டு ஊடகங்கள் சில சுட்டிக்காட்டியுள்ளன. அதுமாத்திரமல்ல, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களும் இதுதொடர்பாக செய்திகளில் கூடிய கவனத்தைச் செலுத்தியதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

சீனா ஒருபோதும் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லை. சிறிலங்கா அரசுக்கே நாம் பண உதவி செய்கின்றோம். எனவே, இது குறித்து நீங்கள் சிறிலங்கா அரசுடன் பேசுங்கள் என சீனத் தூதுவர் தெரிவித்தாலும், உள்நாட்டில் தமிழரின் எதிர்ப்புக் குரலை சீனா சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

அவ்வாறு சீனா கருதியதனால்தான் சிறிலங்காவின் சீனத் தூதுவர் திடீரென யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததுடன் தமிழர்களையும் சந்தித்துள்ளனர். யாழ்ப்பாண அபிவிருத்திக்காக சீனா கூடிய உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாயகத் தமிழர்களின் ஆதரவைப் பெற சீனா இனிவரும் காலங்களில் முயற்சி எடுக்கும் என்பதையே சீனத் தூதுவரின் திடீர் விஜயம் காட்டி நிற்கின்றது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இலங்கையின் இறுதிப் போரில் ஐ.நா தோல்வி: உள்ளக இறுதி அறிக்கையை வெளியிட்டது இன்னர் சிட்டி பிரஸ்! (12.10.2013)
சிறிலங்கா: வடக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழருக்கு நல்லதொரு வாய்ப்பு-The Asian Age  (27.09.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-05 (13.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-04 (06.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03 (05.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02 (03.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01 (02.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை (01.06.2013)
அகிம்சை வழியும் ஆயுதம் தாங்கிய அறப்போருமே ஈழவரலாற்றின் இன்றைய இருப்பு!-சுவிசில் இருந்து தயா (28.05.2013)
இன நல்லிணக்கமோ! சமாதானமோ! எப்போதும் சாத்தியமில்லை- இதயச்சந்திரன் (24.02.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan