.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஆய்வுகள்
 
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்தது எப்படி?
Thursday, 07.11.2013, 09:28am (GMT)


சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, மக்களைப் பாதுகாத்தல் என்கின்ற தனது நோக்கத்தை ஐ.நா நிறைவேற்றத் தவறியது. தமிழ் மக்கள் கொலை வலயத்திற்குள் அகப்பட்டு உயிருக்குப் போராடிய போது இவர்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 
இவ்வாறு Toronto Star ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Rosie DiManno எழுதியுள்ளார். 

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்காவின் கொலை வலயத்தில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை ஐக்கிய நாடுகள் சபை நன்றாக அறிந்து வைத்திருந்தது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, மக்களைப் பாதுகாத்தல் என்கின்ற தனது நோக்கத்தை ஐ.நா நிறைவேற்றத் தவறியது. தமிழ் மக்கள் கொலை வலயத்திற்குள் அகப்பட்டு உயிருக்குப் போராடிய போது இவர்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

ஐக்கிய நாடுகள் சபையானது சிறிலங்காவில் போரில் அகப்பட்ட மக்களைப் பாதுகாக்க முற்படவில்லை என மனித உரிமை அமைப்புக்கள் பல குற்றஞ்சாட்டின. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஐ.நா ஒரு ஆண்டின் முன்னர் தான் ஏற்றுக்கொண்டது. சிறிலங்கா விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது வாய் மூடி, காது கேட்காது, கண் தெரியாதது போல் நடந்துள்ளது. 

அதாவது சிறிலங்காவில் படுகொலைகள் இடம்பெற்ற போது ஐ.நா தட்டிக் கேட்க முற்படவில்லை. இந்த விடயத்தில் சிறிலங்காவை ஆளும் அரசாங்கத்தை ஐ.நா தட்டிக்கேட்காததன் விளைவாக, அனைத்துலக சமூகத்தின் அசட்டைப் போக்கால், பல பத்தாயிரக்கணக்கான மக்கள் போர் வலயத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 

தமிழ்ப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய அதேவேளையில், சிறிலங்கா அரசாங்கமானது இதனைப் பயன்படுத்தி தன்மீதான போர்க் குற்றங்களை குறைத்து எடைபோட முடிந்தது. 

"சிறிலங்காவில் யுத்த மீறல்கள் இடம்பெற்ற போது அவை தொடர்பில் ஐ.நா போதியளவில் நடவடிக்கை எடுக்கத் தவறியது. இதுபோன்று மீண்டும் ஒரு தவறு இடம்பெற்று விடக்கூடாது. இது போன்ற சூழலில் ஐக்கிய நாடுகள் சபையானது மக்களைப் பாதுகாப்பதற்கும் மனிதாபிமான ரீதியில் பொறுப்புக்களை ஏற்பதற்கும் தனது உச்ச நியமங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட, உள்ளக ஆராய்ச்சி வல்லுனர் குழுவின் தலைவரான சாள்ஸ் பெற்றியால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு பொதுமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போலல்லாது ஐக்கிய நாடுகள் சபையானது வன்னிப் பிராந்தியத்தில் அகப்பட்டுத் தவித்த மக்களைப் பாதுகாப்பதைக் கைவிட்டது. 

சிறிலங்காவில் இறுதிக் கட்ட யுத்தம் தீவிரமடைந்திருந்த வேளையில், ஐக்கிய நாடுகள் சபையானது போரில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதைத் தவிர்த்தது. இதன் பின்னர், போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்கா இராணுவத்தினரால் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் வைத்தியசாலைகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை பொதுமக்கள் இழப்பிற்கு மிக முக்கிய காரணம் என்பதை ஐ.நா அறிவிக்கவில்லை. மாறாக பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான முழுப் பழியையும் தமிழ்ப் புலிகள் மீது சுமத்தியது. 

தற்போது ஐக்கிய நாடுகள் சபையானது சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவில் பணிபுரியும் தமிழ்ப் பணியாளர்கள், வைத்தியர்கள், பொது நிர்வாக அதிகாரிகள் போன்றவர்களிடமிருந்து ஐக்கிய நாடுகள் சபை தகவல்களைத் திரட்டி தற்போது வெளியிட்டுள்ளது. 

இறுதி ஐந்து மாதங்கள் மட்டும் இடம்பெற்ற யுத்தத்தில் குறைந்தது 70,000 வரையானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என ஐ.நா அறிவித்துள்ளது. இதைவிட 146,000 வரையானோர் காணாமற் போயுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சிறிலங்கா இழைத்த மீறல்கள் தொடர்பில் ஐ.நா அமைதி காத்ததன் மூலம் அனைத்துலக விமர்சனத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்ற முற்பட்டது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் அழித்தது தொடர்பில் அதனைப் பாராட்டியதுடன், தொடர்ந்தும் அனைத்துலக சாசனங்களால் சிறிலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்துவதை ஐ.நா தடுத்துள்ளது. 

சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சிலர் 'பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்' எனப் பெயரிட்டனர். சிறிலங்கா மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தன. 

இந்நிலையில், சிறிலங்காவில் போர் முடிவடைந்து ஒரு ஆண்டின் பின்னர், அதாவது 2010ல், "சிறிலங்கா தன் மீது இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக் கூறாது காலத்தை இழுத்தடிப்பதற்கு ஐ.நாவின் அமைதிப் போக்கு காரணமாக உள்ளது" என கனடா உயர் நீதிமன்றின் முன்னாள் நீதிபதியும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயர் ஆணையாளரும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் யூகோசிலோவியா மற்றும் றுவாண்டாவிற்கான முன்னாள் பிரதம வழக்கறிஞரும், அனைத்துலக நெருக்கடிக் குழுவின் தற்போதைய தலைவருமான லூயிஸ் ஆர்பர் குறிப்பிட்டிருந்தார். 

சிறிலங்காவில் இறுதிக் கட்டப் போர் இடம்பெற்ற போது ஐ.நா தனது பணியை ஆற்றத் தவறியமை தொடர்பில் இதன் உள்ளக அறிக்கையில் சில காரணங்கள் நியாயப்படுத்தப்பட்டுள்ளன. தனது படைகளால் இழைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் வெளியுலகிற்கு தெரியக்கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசாங்கமானது வெளிநாட்டுப் பணியாளர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான அனுமதியை மறுத்தது. 

அத்துடன் சிறிலங்காவில் பணிபுரிந்த ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த பணியாளர்கள் அரசாங்கத்தால் அச்சுறுத்தப்பட்டனர். ஐ.நா பணியாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்க ஆதரவு ஊடகங்கள் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. இதற்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையின் கணிணி முறைமைகள், மின்னஞ்சல்கள், தொலைபேசிகள் போன்றன கண்காணிக்கப்பட்டன. 

இவ்வாறான காரணங்களால் வன்னியில் செயற்பட்ட தனது பணியாளர்களை வெளியேற்றுவதென 2008ல் ஐ.நா தீர்மானித்தது. ஐ.நா வின் கீழ் பணிபுரிந்த உள்ளுர் பணியாளர்கள் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்காததால் அவர்களை மட்டும் ஐ.நா வெளியேற்றவில்லை. 

ஜனவரி 2009ல் ஐ.நா உணவுத் தொடரணி மீது சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதானது பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்திய முதலாவது சம்பவமாகக் காணப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பெப்ரவரியில் ஐ.நா அமைப்பின் வன்னிக்கான பிரதிநிதிகள் இரு வாரங்களுக்குள் 3,700 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும், காயமடைந்தும் உள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில் இந்த மக்களைப் பாதுகாக்குமாறும் கோரப்பட்டது. போரில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் மக்களின் இழப்புகளுக்குக் காரணமாக இருந்த போதும், சிறிலங்கா அரசாங்கப் படைகளே அதிகம் தாக்குதல்களை மேற்கொண்டன. 

"ஐ.நா தகவல்களின் பிரகாரம், ஐ.நா நிறுவனங்களின் நிலையங்கள், வைத்தியசாலைகள் உள்ளடங்கலாக சிறிலங்கா அரசாங்கப் படைகளின் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களிலேயே அதிக இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐ.நா நிறுவனத்தின் வன்னிக்கான பிரதிநிதிகள் அனுப்பிய கடிதத்தில், அனைத்துலக மனிதாபிமான மற்றும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடப்படவில்லை" என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில், ஐ.நா அரசியல் விவகாரப் பணியாளர்கள் சிறிலங்காவுக்கு வந்திருந்தனர். போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பாக இவர்கள் ஆராய்ந்ததுடன், "இது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்காவிடில் பொது மக்களின் இழப்புகளுக்கு நாங்கள் காரணமாக இருப்போம்" என குறிப்பிட்டிருந்தனர். 

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், பொதுமக்களின் இழப்பை மறுத்தது. இதேவேளையில், கொழும்பில் செயற்பட்ட சில ஐ.நா பணியாளர்கள், ஐ.நா இந்த இழப்புக்கள் தொடர்பான முற்றுமுழுதான பழியை புலிகள் அமைப்பு மீது போட்டமை தொடர்பில் அதிருப்தியடைந்தனர். 

"2009 பெப்ரவரி 06 தொடக்கம் பாதுகாப்பு வலயத்திற்குள் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டது. அதாவது தரை, கடல் மற்றும் வான் போன்ற எல்லா மார்க்கங்களிலிருந்தும் சிறிலங்கா இராணுவம் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டன. 

மிகச் சிறிய பாதுகாப்பு வலயத்திற்குள் 300,000 தொடக்கம் 350,000 வரையான பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர். சிறிலங்காப் படையினர் பொதுமக்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களையும், நீண்ட தூர எறிகணை மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டன. அத்துடன் சிறிய ரக உந்துகணைகள், துப்பாக்கிச் சூடு போன்றவற்றையும் பிரயோகித்தனர்" என ஐ.நா உள்ளக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"மே 18, 2009 அன்று சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இவர்கள் போர் நடவடிக்கையின் போதே படுகொலை செய்யப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. மே 18 காலை வேளையில், வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்த நிராயுதபாணிகளான புலி உறுப்பினர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்" என உள்ளக ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போர் முடிவடைந்து, சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றியை அறிவித்து ஒரு கிழமையின் பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவுக்குள் என்ன நடந்தது என்பதை அறிந்து வைத்திருந்த போதும், தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் அழித்ததைப் பாராட்டி தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. ஆனால் சிறிலங்கா இராணுவத்தால் போரின் போது இழைத்த தவறுகளை மனித உரிமைகள் பேரவை குறிப்பிடத் தவறியது. 

வைத்தியசாலைகள் மீதான குண்டுத் தாக்குதல்கள், உணவு மற்றும் மருந்துகளுக்கு தடை விதித்தமை, இராணுவத்தின் முற்று முழுதான கண்காணிப்பின் கீழ் 280,000 வரையான தமிழ் மக்கள் முகாங்களில் அடைக்கப்பட்டமை போன்ற சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட எந்தவொரு மீறல்களையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தனது தீர்மானத்தில் குறிப்பிடத் தவறியது. 

"தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடிக்குள் சிக்கித் தவித்த பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களை சிறிலங்கா அரசாங்கம் விடுவித்துள்ளதை நாம் வரவேற்கிறோம். அனைத்து சிறிலங்கர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை நாம் வரவேற்கிறோம்" என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்iயில் சிறிலங்கா அரசாங்கம் மீது புகழாரம் சூட்டப்பட்டது.

மொழியாக்கம்- நித்தியபாரதி
நன்றி-புதினப்பலகை


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
சிறிலங்கா அரசின் அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி அவாவை சிறிதளவேனும் குறைக்கவில்லை (14.10.2013)
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் - 'சமூக சிற்பிகளின்' ஆய்வு (26.09.2013)
செப்.21 பௌத்த சிங்கள பேரினவாதத்தோடு தமிழர்கள் கணக்குத் தீர்க்கும் நாளாக அமையட்டும்! (13.09.2013)
எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா? என்.செல்வராஜா, (31.05.2013)
மாணவர் எழுச்சிப் போராட்டத்தி​ற்கு வித்திட்ட பாலச்சந்தி​ரனின் படுகொலை!- இதயச்சந்தி​ரன் (20.03.2013)
யதார்த்தமான உண்மைகளை யாரும் மறைக்க முடியாது!- ச. வி. கிருபாகரன் (05.02.2013)
பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். - அ.மயூரன் (13.01.2013)
இலங்கையில் தமிழர்கள் அடக்கப்படும் வழிகளும் எதிர்கொள்ளும் வழிமுறையும்- யாழிருந்து ஆனந்தர் (03.01.2013)
"புனிதர் சம்பந்தனின்" அரசியல் நகர்வுகள் யாருக்கானவை? (17.12.2012)
குற்றவாளிக் கூண்டில் ஐநா-பா. செயப்பிரகாசம் (15.12.2012) 
::| Latest News
 

Site Created By: Thiliepan