.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?!
Sunday, 03.03.2013, 11:30am (GMT)

சூழ்ச்சிகள் மூலம் போரில் வென்றாலும் தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்க முடியாது என்பதை ஜெனீவாக் களம் பறைசாற்றியிருக்கின்றது. திட்டமிட்ட இன அழிப்பின் ஊடே போரில் வென்ற சிங்கள இனவாத அரசு முடிந்த அளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் முரண்நிலைகளைத் தோற்றுவித்து பிரிவினைகளை ஏற்படுத்தவும் முற்பட்டது. இருப்பினும் சரியான நேரத்தில் அனைவரும் ஒரு சேரப் பயணிப்போம் என்பதனை தமிழர் பிரதிநிதிகள் தற்போது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கடந்த ஜெனீவாக் கூட்டத் தொடரின் போது அரச தரப்பினைச் சேர்ந்த சிறுபான்மை அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ஜெனீவா சென்று இனக்கொலைகளை நியாயப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அங்கு செல்லாமை தொடர்பில் பலத்த விமர்சனங்களும் அபிப்பியாரங்களும் வெளிவந்திருந்தன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் தொடர்பிலான சந்திப்புக்களிலும் அது சார்ந்த நிகழ்வுகளிலும் பங்குகொள்வதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏழுபேர் கொண்ட குழுவினர் ஐரோப்பாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருக்கின்றனர். அதேபோல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர்களும் அங்கு சென்றிருக்கின்றார்கள்.

இதேபோல் உலகத்தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசு என ஈழத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் ஒரே விடத்தினை வலியுறுத்தத் திரண்டிருக்கின்றமை மிகுந்த பாராட்டுதலுக்கும் ஆறுதலுக்கும் உரிய விடயமாகும். தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என்ற குற்றச்சாட்டினை சர்வதேசத்தின் பார்வையில் இருந்து தகர்த்தெறிவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பமாக ஜெனீவாக் களம் திகழ்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
.
மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் சமகாலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களையும் மிகுந்த வேதனைக்கும் ஆத்திரத்திற்கும் உட்படுத்திருக்கின்றது.. குறிப்பாக தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தினை விமர்சனத்திற்கு உட்படுத்தியவர்களே சிங்கள இராணுவப் படைகளை கடுமையாக எதிர் நிலையில் பார்க்கும் அளவிற்கு பாலச்சந்திரனின் உயிர்க்கொடை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

அதேபோல இறுதிப் போர் உக்கிரமடைந்திருந்த போது தமிழகம் எவ்வாறான கொதி நிலையில் இருந்ததோ அவ்வாறான ஒரு நிலை தற்போதும் அங்கு ஏற்பட்டிருக்கின்றது. சிங்களவர்கள் எவரும் தமிழகத்திற்குள் காலடி எடுத்துவைக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக திரண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இந்திய மத்திய அரசு தலையிட்டு தீர்மானங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்ததன் பின்னரே அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தது. இதன் காரணமாகவே குறித்த தீர்மானம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தவல்ல ஒன்றாக அமைந்திருக்கவில்லை. இருப்பினும் இந்தியா கடந்த ஆண்டு எடுத்த நிலைப்பாடு தொடர்பிலும் எதுவித நன்றி உணர்வுகளும் அற்ற வகையிலேயே சிங்கள அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்பதற்கு இரண்டு ஆதாரங்களை முன்வைக்க முடியும்.

முதலாவதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்தியாவை மிரட்டும் வகையில் கருத்துத் தெரிவித்திருப்பதனைச் சுட்டிக்காட்டலாம். இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்பதன் ஊடாக இந்தியாவை மஹிந்த ராஜபக்ச மிரட்டுவதை அவதானிக்கலாம்.

போர் மூலம் தமிழின பேரழிவு நிகழ்ந்தேறியதற்கு காரணமாக இருந்த இந்திய மத்திய அரசு இவ்வாறான ஒரு நன்றிகெட்ட தனத்தை சிங்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்நோக்கும் என்பதை அரசியல் நோக்கர்கள் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இந்திய மத்திய அரசு அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

அதேபோல ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கருத்து வெளியிடுகையில், இந்தியா கடந்த ஆண்டு தீர்மானத்தின் போது இறுதி நேரத்தில் முடிவெடுத்தமை தமக்கு ஒரு பாடம் என்றும் அதனை ஒரு பாடமாக வைத்துக் கொண்டு தாம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானம் செயலிழக்கக் காரணமாக இருந்தது இந்தியா தான் என்ற நன்றி உணர்வு ஜனாதிபதியிடமோ, ஊடகத்துறை அமைச்சரிடமோ காணமுடியவில்லை. அல்லது அமெரிக்கா, இந்தியா ஆகிய வல்லரசுகளுக்கு சவால் விடுக்கும் நிலையில் இருக்கும் சீனா என்கின்ற பலம் தனக்கு இருப்பதாக எண்ணியே சிங்கள அரசு நடந்துகொள்கின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த ஆண்டு நிறைவேறக்காத்திருக்கும் புதிய தீர்மானத்தினையாவது உரிய முறையில் நிறைவேறுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் கடப்பாடும் வல்லமையும் தமிழகத் தலைவர்களிடமும் மக்களிடமுமே உள்ளன. ஒற்றுமையே பலம் என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழகம் இறுதிவரை குரல்கொடுக்கவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போதில்லை என்று சிங்கள அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருக்கின்ற நிலையில் மீண்டும் மீண்டும் தோன்றும் முரண்நிலைகள் சர்வதேசத்தில் இருந்து சிறிலங்காவை அந்நியப்படவைக்கும் அல்லது சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தங்கள் ஏற்படும் என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசு ஏன் புரிந்துகொள்ளத் தயங்குகின்றது என்பது மற்றொரு கேள்வியாகும்.

எமது விடுதலைக்காக பல்லாயிரம் மாவீரர்கள் பல்லாயிரம் மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அவர்களின் வரிசையில் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை, தாய், தலைவர் அவர்களின் பிள்ளைகள் என நீண்ட அர்ப்பணிப்புக்கள் நிகழ்ந்தேறியிருக்கின்றன. அர்ப்ப சொற்ப சலுகைகளுக்காக இத்தனை உயிர்களும் வீண் போகவில்லை. அரசாங்கம் கொடுக்கும் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுக்காக இனியும் நாம் முரண்டுபிடிக்கவேண்டியதில்லை.

மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட எமது இனத்திற்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் இதற்காகவே இத்தனையாயிரம் உயிர்க்கொடைகளும் நிகழ்ந்தேறியிருக்கின்றன. இனிவருங் காலம் சிங்கள அரசாங்கத்திற்கு நெருக்கடி மிகுந்ததாகவே இருக்கப்போகின்றது. போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவதன் நோக்கம் போர்வெறிகொண்டு இன அழிப்பை மேற்கொண்ட அரசை தண்டிப்பது அல்ல. மாறாக சர்வதேசம் கொடுக்கும் அழுத்தத்தின் ஊடே எமது இலக்கினை எட்டிவிடவேண்டும் என்பதுதான் அது.

சிங்கள அரசின் இனவாதப் போக்கு சர்வதேசத்தின் கதவுகளை தட்டும். தமிழர்களுக்கு தனிநாடு தேவைதானா? என்ற கேள்விக்கான பதிலை சிங்கள் அரசின் செயற்பாடுகளே உணர்த்தப்போகின்றன. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு போடப்போவதாகச் சொல்லிக் கொள்ளும் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை கைநீட்டி ஏந்தப் போகிறோமா? அளவிட முடியாத தியாகங்களுக்கான பதிலினைத் தேடிக்கொள்ளப்போகிறோமா? என்பதை எமது மக்களின் பிரதிநிதிகள் முடிவெடுக்கவேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நிலைப்பாட்டினை எடுப்பதைத் தவிர்த்து எமக்கென்று ஒரு நாடு வேண்டும் என ஒரே குரலில் செயற்படுவதே வீழ்ந்து விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களுக்கும் அனாதரவான நிலையில் பரிதவிக்கும் தமிழ் மக்களுக்கும் அரசியல் தலைவர்கள் செய்யும் கைமாறாகும்.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
புலம்பெயர் வாழ்வில் எங்கள் மனிதங்களைத் தொலைத்து விட்டோமா…? (25.02.2013)
ஒன்றுபட முனைந்த பிரான்சும் அதை தடுத்து நிறுத்தி பங்கு பிரிப்பும் படுகொலையும்! இறுதி பாகம் (27.01.2013)
ஒன்றுபட முனைந்த பிரான்சும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய பிரித்தானியாவும், சுவிசும்? (06.01.2013)
ஈழ விடுதலைக்கான வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது-சுவிசில் இருந்து தயா (06.01.2013)
பருதியின் படுகொலையும் விநாயகம் கைதும்! பின்னணி என்ன? புலனாய்வுத்தகவல்! (05.01.2013)
வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது!சுவிசில் இருந்து தயா (05.01.2013)
சமகால யதார்தமும் எதிர்கால சந்தற்பங்களும்! - சுவிசில் இருந்து தயா (29.12.2012)
எம்.ஜி. ஆரின் 25-ம் ஆண்டு நினைவு வணக்கம் அவரது நினைவாலையத்தில் இன்று நடைபெற்றது. (24.12.2012)
நான் அன்றும் இன்றும் புலிகளுக்கு எதிரானவன் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்-இரா.சம்மந்தன் (08.12.2012)
பிளவுபட்டது எக்ஸெல்! கமல் தனம் குழுவின் அடாவடி! நான்கு இடங்களில் மாவீரர்நாள் நிகழ்வு! (24.11.2012) 
::| Latest News
 

Site Created By: Thiliepan