.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு 
Friday, 15.06.2018, 10:19pm (GMT)

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப் போரட்டத்தை குற்றவியலாகவும், பயங்கரவாதமாகவும் சித்தரித்து அடக்குவதற்கு 2000 ஆம் ஆண்டு முதல் தமிழினப் படுகொலைக்கு முண்டு கொடுத்துச் செயற்படும் வல்லாதிக்க சக்திகள் சுவிஸ் அரசிற்கு அழுத்தம் கொடுக்து வந்தது. அந்த அழுத்தத்தின் காரணமாக 2005 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் முனைப்புப் பெற்ற இச் சட்ட நடவடிக்கைகள் 2011 வலுப்பெற்று சுவிசின் வரலாற்றில் இதுவரையும் இடம்பெற்றிராத மாபெரும்  வழக்காக பெரும் செலவில் இடம்பெற்றது.

08.01.2018 அன்று, சுவிஸ் நாட்டில், "பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு" எனும் குற்றச்சாட்டோடு 13 பேர் மீது வழக்கு ஆரம்பமானது. இப் 13 நபர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாணவர்கள் என்று அக்குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சுவிஸ் நாட்டின் ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும் இவ்வழக்கு ஒரு பிரதான செய்தியாக அமைந்திருந்தது. இருப்பினும், இவ்வழக்கின் ஆழம் மிகப்பெரியது. அதனால் இவ்வழக்கையும்  நேற்று 14.06.2018 வெளியான தீர்ப்பையும் மேலோட்டமாகப் பார்க்காமல் பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஊடகங்களும், அரசியற் செயற்பாட்டாளர்களும், தமிழ் மக்களும் உள்ளனர். இதைத் தமிழர்கள் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கு அமைவாக செயற்படவேண்டும்.

பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு

20.07.2016 அன்று சுவிஸ் நாட்டின் மத்திய அரசின் வழக்கறிஞர் சம்மேளனத்தின் இணையதளத்தில், 13 நபர்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நபர்கள் மீது:

– ஒரு குற்றவியல் அமைப்பின் அங்கத்துவம்

– ஒரு குற்றவியல் அமைப்புக்கான உதவி

– நிதி மோசடி

– பத்திர மோசடி மற்றும்

– பண மோசடி,

போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அத்தோடு, விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய நிதி உதவியினால் யுத்தம் இன்னும் கொடூரமாகவும், நீண்ட காலமாகவும் நடைபெற்றது என்றும் அக்குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பலட்டமை குறிப்பிடத்தக்கது. இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஒப்பானதொன்றாகவும், தமிழினவழிப்பை நியாயப்படுத்தும் ஒரு மோசமான விடயமாகவும் காணப்பட்டது.

இவற்றுக்கும் அப்பால் இவ்வழக்கின் பிரதான கேள்வியாகப் பார்க்கப்படும் விடயம் என்னவெனில், "தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பா?" என்பதாகும். சுவிஸ் நாட்டின் மத்திய அரசின் வழக்கறிஞர் சம்மேளனம், இதனை பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு எனக் கருதுவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒரு பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்திருந்தது. இக் கேள்விக்கான பதிலை, அவ்வழக்கின் நீதிபதிகள் சட்ட வல்லுனர்களின் உதவியோடும் வரலாற்று வல்லுனர்களின் உதவியோடும் இன்று வழங்கினர்.

கிளர்ச்சி முறியடிப்புச் சூழலும் இவ்வழக்கும்

COIN (Counter-insurgency) என்றழைக்கப்படும் கிளர்ச்சி முறியடிப்புத் திட்டம், வெறும் இராணுவ விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையல்ல. ஏனெனில், கிளர்ச்சி முறியடிப்பு என்பது ஆயுதம் தரித்த கிளர்ச்சியாளர்களைக் கொல்வது மட்டுமின்றி, அக்கிளர்ச்சியூடாக உருவான அரசியல் வெற்றிடத்தை அழித்தலே ஆகும்.

அதன் அடிப்படையிலேயே 2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளோடு சேர்த்து, அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசும் அழிக்கப்பட்டது. ஏனெனில் இலங்கை அரசின், "அரசியல், நிர்வாக மற்றும் ஆயுத ஏகபோகங்களை" முறியடித்து, தமிழீழ நடைமுறை அரசு நிறுவப்பட்டது.

2009ம் ஆண்டு இலங்கைத் தீவிலிருந்த தமிழீழ நடைமுறை அரசு அழிக்கப்பட்டு, தமிழரின் தாயகத்தில் இலங்கை அரசின் ஏகபோகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஆனால், 2009ம் ஆண்டின் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மூலம், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நிலவுகின்ற தாயகக் கோட்பட்டை அழிக்க முடியவில்லை. அதனால் தான், புலம்பெயர்ந்த தமிழர்களின் மீதும் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ் வேலைத்திட்டங்களுக்குள் இவ்வழக்கும் அடங்குகின்றது.

சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு

24.12.2000 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். மூன்று தடவைகள் இதன் கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் இதற்கு ஓர் தகுந்த பதிலை அளிக்கவில்லை. கட்டுநாயக்க மற்றும் பண்டாரநாயக்க விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னரே, சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்குத் தகுந்த பதிலை அளித்தது . தமிழர் தரப்பின் முயற்சியாலேயே, யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து, அதன் அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

"இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பாக அறிவிப்பது ஒரு பிழையான முடிவு. ஏனெனில், சமாதான நடவடிக்கைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதால், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பாக அறிவித்தல் ஒருதலைப் பட்சமானதாக அமைந்துவிடும்," என்று 2005ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் வழக்கறிஞர் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

ஆனால், Washington நகரில் நடைபெற்ற மகாநாட்டில் தமிழர்களைப் புறக்கணித்து, சுனாமி கட்டுமானத்தை நிலைகுலைய வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையினைக் கொண்டுவந்து, இப் பேச்சுவார்த்தை முறிவுபெற்றது. இந்த நிகழ்வுகளின் பின்னணியில் இந்திய, அமெரிக்க வல்லாதிக்கங்கள் இருந்தன. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததுடன், 2008ம் ஆண்டு சிறீலங்கா போர்நிறுத்தத்திலிருந்து விலகியது. இதன் பின்னரே, 2009ம் ஆண்டில் யுத்தம் உக்கிரமடைந்து முடிவுபெற்றது.

பேச்சுவார்த்தையை வெளிப்படையாகச் சக்திகள் தடுத்த போதும், திட்டமிட்ட வகையில் தமிழர்கள் அழிக்கப்பட்ட போதும், சுவிஸ் மௌனம் காத்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் புரிந்தனர் என்றும், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதால் யுத்தம் இன்னும் கொடூரமாக நடைபெற்றது என்றும், வழக்கறிஞர் சம்மேளனம் குறிப்பிட்டது.

மறு புறத்தில், சிறீலங்காவுடன் இடப்பெயர்வு தொடர்பான உடன்படிக்கையைச் செய்து, தமிழர்களின் அடையாளத்தை மறுக்கிறது. அத்துடன் இவ்வழக்கின் ஊடக சேகரிக்கப்பட்ட அனைத்து நகல்களையும் சிறீலங்காவுக்கு கையழித்ததுடன் சட்ட உதவிகள் சார் கூட்டாண்மை எனும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டது.

அத்தோடு, 2011ம் ஆண்டு இவ்வழக்குத் தொடர்பாக கைதுகளை மேற்கொண்ட பொழுது, வழக்கறிஞர் சம்மேளனத்தின் இணையத்தளத்தில், "சட்டத்துக்குப் புறம்பான நிதிசேகரிப்பு" எனும் வார்த்தைப்பிரயோகம் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் 2016ம் ஆண்டு, அதே இணையத்தளத்தில் "பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு" எனும் வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டது.

இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவெனில், 2005ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் வழக்கறிஞர் சம்மேளனத்தின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள், இப்பொழுது இப் பதவியை வகிக்கவில்லை. இப்பொழுது இப்பதவியை வகிக்கும் நபர், IMF மற்றும் உலக வங்கியுடன் இணைந்து, அவர்களின் சில வேலைத்திட்டங்களில் சேர்ந்து செயற்பட்டவர் ஆவார். எவ்வளவு பொதுமக்கள் இறப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என்று IMF அமைப்பும், உலக வங்கியும் தெரிவித்திருந்தமை, "WIKILEAKS" வெளியிட்ட "Hilary Clinton" னின் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய வரலாற்றுத் தீர்ப்பும் போராடும் மக்களுக்கான செய்தியும்

இன்றைய வரலாற்றுத் தீர்ப்பை அறிவித்த சுவிசின் உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்கள் இவ்வழக்கை மேலோட்டமாக மட்டும் பார்க்காமல் வரலாற்று ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி தீர்ப்பளித்துள்ளார்.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்றது ஒரு பயங்கரவாதம், தீவிரவாதமோ அல்ல அது ஒரு இனவிடுதலைக்கான போராட்டம் என்று  ஏற்றுக்கொள்ளப்படுள்ளது. மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பானது வெறுமனவே ஆயுதம் தரித்த தரப்பாக மட்டும் செயற்படவில்லையெனவும், அரசியல் ரீதியாகவும் அனைத்துக் கட்டுமானங்களையும் கொண்டிருந்தார்கள் எனவும் தெருவித்தார்.

அவர்களின் இராணுவமானது பெண்களையும் உள்ளடக்கிய  நாங்கு மார்க்கமான படைகளையும், அதற்கான நேர்த்தியான நெறியாள்கையில் ஓரு இராணுவத்திற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகவே இருந்ததென்று இடுத்துரைத்தார்.

கரும்புலிகள் சார்ந்து கருத்துத் தெருவிக்கையில், அப்படையானது ஓர் விசேட படைப்பிரிவாகவே செயற்பட்டதென்றும் ஆனால் தற்கொலைப்படையென்று பொதுவெளியில் அழைக்கப்பட்டதென்றும் குறிப்பிட்டார். அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு நிழல் நிலை அரசையும் நிறுவி நடமுறைப்படுத்தினார்கள் என வரலாற்றை மீழ்ஞாபகப்படுத்தி தீர்ப்பின் காரணிகளை தெளிவுபடுத்தினார்.

1983ற்கு முன் பின் என தமிழர்களின் வரலாறை ஆய்வுக்குட்படுத்தி தீர்ப்பெழுதப்பட்டுள்ளமை பல இடங்களில் ஈழத்தமிழர்கள் பட்ட அவலங்களை தொட்டுச்சென்ற போது தெளிவாகப் புலப்பட்டது.  இவ் ஆய்வுகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஓரு விடுதலை இயக்கம் என சுவிசின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பின் அங்கத்துவம், குற்றவியல் அமைப்புக்கான உதவி, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.

ஏனைய மூன்று முன்னை நாள் புலி உறுப்பினர்களுக்கும் வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காக தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு குற்றங்கள் புரியாமல் நன்னடத்தையை வெளிப்படுத்தவேண்டும்.

அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகளை நீதிமன்றம் நிராகரித்தது.

சுவிஸின் உச்ச நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்தது.

இத்தாலி நாட்டின் நாப்போலி மாநகரத்தின் நீதிமன்றனம், டென்மார்க் உயர் நீதிமன்றம், ஐரோப்பிய நீதிமன்றம் போன்றவற்றின் தீர்ப்புக்களின் வரிசையில் சுவிஸின் இன்றைய தீர்ப்பானது விடுதலைக்காக போராடும் தமிழீழ மக்களாகிய எமக்கு மட்டுமின்றி ஏனைய இனங்களுக்குமான புத்துணர்ச்சியையும், தன்னெழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உறுதியான நிலைப்பாட்டுடன் தர்மத்தின் வழி தொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி நிற்கும் என்ற வரலாற்றுச் செய்தி இன்று நிரூபனமாகியுள்ளது. இவ் வெற்றியை 2009 இற்கு பின்னதான தமிழர்களின் மீழ் எழுச்சிழயாக்கி வீச்சுடன் விடுதலை நோக்கிப் பயணிப்போம்.

ஆதாரங்கள்

https://www.bundesanwaltschaft.ch/mpc/de/home/medien/archiv-medienmitteilungen/news-seite.msg-id-62777.html
 https://www.tagesanzeiger.ch/schweiz/standard/Der-Monsterprozess/story/10079549
Learning Politics from Sivaram; ப. 133
http://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/slmm_final_report.pdf ; ப.23
https://www.srf.ch/news/schweiz/monsterprozess-schweizer-tamil-tigers-auf-der-anklage-bank
 http://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/slmm_final_report.pdf ; ப.27
http://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/peace_process_halts_genocide_en.pdf ; ப. 14
http://www.jdslanka.org/index.php/news-features/politics-a-current-affairs/600-tamil-tiger-defeat-would-have-been-impossible-without-our-friends-in-washington-mangala
http://www.puradsimedia.com/?p=53
https://www.bundesanwaltschaft.ch/mpc/de/home/medien/archiv-medienmitteilungen/news-seite.msg-id-37134.html
https://www.parlament.ch/afs/data/d/bericht/2011/d_bericht_v_k536_0_20110213_0_20110824.htm
https://wikileaks.org/clinton-emails/emailid/15943

https://youtu.be/R1Pkgtkg7SA

https://www.youtube.com/watch?v=OPDjU9hyjNY
செய்திப் பதிவு- தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தூத்துக்குடிக்கு பொங்கியது ஏன் முள்ளிவாய்க்காலுக்கு பொங்கவில்லை???- செம்மலை (05.06.2018)
வடக்கில் ஆட்சியைப் பிடிக்க தமிழ் கட்சிகள் போட்டி: (20.02.2018)
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிள்வோம்! (16.02.2018)
இனவாதத்திற்கு தற்போதைய (27.12.2014)
அடுத்தவரை திருத்த முயற்சிக்கும் முன்னர் தன்னைத் தான் திருத்திக்கொள்ள வேண்டும். (05.02.2014)
இடம் பெயர்ந்த மக்கள் குறித்து ஜனாதிபதியும் அவரின் செயலரும் மாறுபட்ட கருத்துக்கள் (30.01.2014)
வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது-சுவிஸ் தயா (26.10.2013)
காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஈராக்கிற்கு அடுத்த நாடாக சிறிலங்கா (22.10.2013)
ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் ஐயா உயர்திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! (31.08.2013)
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை!- சி.வி.விக்னேஸ்வரன் (31.08.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan