.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான அறிக்கைகள்!
 

தமிழீழ மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கை,2017 தமிழீழ விடுதலைப் புலிகள்.


Monday, 27.11.2017, 06:48pm (GMT)


தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

27.11.2017.

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

உயர்ந்த இலட்சியத்திற்காக தமது உயிர்களைத் தியாகம்செய்யத் துணிந்த உத்தமர்களை நினைவுகொள்ளும் நாள்.

மனிதவாழ்வின் சராசரி ஆசைகளைத் துறந்து தமிழினத்தின் மீட்சிக்காக அயராதுழைத்து வீழ்ந்த புனிதர்களைப் பூசிக்கும் புனிதநாள்.

போராட்ட விழுமியங்களைப் போற்றி உயரொழுக்கக் கட்டுக்கோப்புடன் போராடி மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் விதையாகிப்போன இந்த மானமறவர்களை ஈன்றெடுத்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் என்றும் போற்றுதற்குரியவர்கள்.

எமது மாவீரர்கள் போர்வெறிகொண்டு படையெடுத்தவர்களுமில்லை. பொருளாசைகொண்டு போர்தொடுத்தவர்களுமில்லை. அவர்களின் போராட்டத்தில் உயரிய ஓர் இலட்சியமிருந்தது. அந்த இலட்சியத்துக்காக உயிரைக்கொடுக்கும் தியாக உணர்விருந்தது. போராட்டவழியில் ஏற்படும் அனைத்து இன்னல்களையும் எதிர்கொள்ளும் அர்ப்பணிப்பும் திடமும் இருந்தது.

எமது மாவீரர்கள் தமிழ்மக்களின் இனவிடுதலைக்காகவே போராடினார்கள். ஆண்டாண்டு காலமாய் அந்நியரால் அடக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லற்பட்ட எமது மக்களின் விடுதலைக்காகவே போராடினார்கள். எமது மக்கள் தமது மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காகவே தமது உயிரைத் துச்சமென மதித்துப் போர் புரிந்தார்கள். எமது மக்களின் அரசியல் வேட்கையை அடையவே அவர்கள் போராடினார்கள்.

தம்மைத்தாமே நிர்வகிக்கின்ற, பாதுகாப்பான, இறைமையுள்ள, ஓர் அரசகட்டமைப்பை நிறுவுவதே எமது மக்களின் அரசியல் வேட்கையாக அமைந்திருந்தது. இந்தப் போராட்டப் பயணத்தில் ஆயுதப்போராட்ட வடிவில் அதற்குச் செயல்வடிவம் கொடுத்தவர்களே எமது மாவீரர்கள். அறவழிப்போராட்டங்கள் அனைத்தும் அடக்குமுறையாளர்கள் முன்னால் அர்த்தமற்றுப்போன பின்னர்தான் எமது மக்களிலிருந்து எழுந்துவந்த இளந்தலைமுறையொன்று ஆயுதவழி எதிர்ப்பை முன்னெடுத்தது. உலகில் நிகழ்ந்தேறிய, நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு விடுதலைப் போராட்டங்களைப் போலவே எமது இனவிடுதலைப் போராட்டமும் அதன் பரிணாம வளர்ச்சியில் ஆயுதப் போராட்ட வடிவத்தைக் கையிலெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. எமது விடுதலைப் போராட்டமும் முழுக்க முழுக்க நியாயமான காரணிகளின் அடிப்படையிலேயே தொடங்கப்பட்டது, நியாயமான வழியிலேயே நடாத்தப்பட்டது.

இருந்தபோதும், தமது புவிசார், பொருளாதார – அரசியல் நலன்களுக்காக எமது மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் உலகநாடுகள் சிலவற்றால் பந்தாடப்பட்டு, பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, உலக வல்லரசுகளினதும் பிராந்திய ஆதிக்க சக்திகளினதும் பகடை விளையாட்டுக்கு பலிக்கடாவாகியது. ஈற்றில், மானுட வரலாற்றின் மிகப்பெரும் மனிதத் துயரோடு எமது ஆயுதவழிப் போராட்டம் நசுக்கப்பட்டது.

போர் முடிவடைந்ததாக அறிவித்தபின் இந்த எட்டாண்டுகளில் எமது மக்களின் அரசியல் வேட்கைகள் குறைந்தபட்சமேனும் நிறைவேற்றப்படவில்லை. அடிப்படை நிர்வாக முறைகளில் எமது தமிழ்மக்களுக்கான உரிமைகள் பேணப்படவில்லை. மாறாக சிங்களப் பேரினவாத அரசின் இனவழிப்பு தொடர்ந்தவண்ணமேயுள்ளது. காணிப்பறிப்புகள் தொடங்கி நிர்வாக உரிமைப்பறிப்புக்கள் வரை பேரினவாத பூதம் தமிழ்மக்களை நித்தமும் வதைத்துக்கொண்டே இருக்கின்றது.

அரசியற்கைதிகள், முன்னாட் போராளிகளின் நிலைமை துன்பத்துக்கிடமாகவே ஒவ்வொரு நாளும் நகர்கின்றது. தான் நினைத்த நேரத்தில் யாரையும் கைது செய்யலாம், எவ்வழக்கின் கீழும் தண்டிக்கலாமென்று தான்தோன்றித்தனமாகவே இயங்குகிறது அரச இயந்திரம். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பில் காட்டப்பட்டுவரும் மௌனத்தைப் பல்லாண்டுகளாக எதிர்கொண்டுவரும் அவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருநாளும் வதைபட்டுக்கொண்டே வாழ்கின்றனர். திட்டமிட்ட வகையில் சமூகக்குற்றங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களின் அன்றாட வாழ்வியல்முறை சீரழியவிடப்பட்டுள்ளது. எமது மக்களின் அன்றாட வாழ்வில் படையினரின் தலையீடு எல்லாவழிகளிலும் அவர்களை அச்சுறுத்துகின்றது.

மறுபுறத்தில் எமது மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்த வண்ணமே உள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியற்கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு என பலதரப்பட்ட தளங்களில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தங்கள் அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தும் விதத்தில் தமிழீழத்தில் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள் மக்களால் தன்னெழுச்சியாக நிகழ்த்தப்பட்டன. ஆனால் எவற்றுக்கும் பதிலளிக்காமல், நியாயமளிக்காமல் சிறிலங்கா அரச இயந்திரம் தொடர்ந்தும் தனது இனவழிப்புச் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகின்றது.

போரை முடிவுக்குக் கொண்டுவர முண்டியடித்து உதவி செய்த உலக நாடுகளோ, பரிதவித்த மக்களைக் காக்காமல் தன்வினை ஆற்றத்தவறிய ஐக்கிய நாடுகள் சபையோ இன்றுவரை எமது மக்களின் இன்னல் தொடர்பில் பாராமுகமாகவே இருப்பது கவலைக்குரியது. எமது தாயகப்பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வரவுகளும், மக்களுக்கான நம்பிக்கையூட்டல்களும் வாக்குறுதிகளும் வெறும் செய்திகளாக நின்றுகொள்கின்றனவே அன்றி எமது மக்களின் இன்னல்களுக்கு எவ்வித விடிவையும் தருவதாகத் தெரியவில்லை. எமது மக்களின்மீது கரிசனைகொண்டு இயங்குவதாக நடாத்தப்படும் நாடகங்களாகவே இவை நோக்கப்படுகின்றன. பெயருக்குப் பிரேரணைகளை முன்மொழிவதும், திருத்துவதும், நிறைவேற்றுவதும் – பின் காலஅவகாசம் என்று இழுத்தடிப்பதுமாகக் காலங்கடத்தும் ஓர் உத்தியாகவும், தமக்கான அரசியல் நலன்களைப் பேண ஒரு கருவியாகவுமே ஐ.நா. சபையின் மனிதவுரிமைக் கூட்டத்தொடர் கையாளப்படுகிறது என்பதை விசனத்துடன் நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

இச்செயற்பாடுகள் நீதி மீதான எமது மக்களின் நம்பிக்கையையை நீர்த்துப்போகச் செய்கின்றன. இந்தக் கால இழுத்தடிப்பானது சிறிலங்கா அரசு தமிழின அழிப்பைத் தொடர்வதற்கான ஆசீர்வாதமாகவே நாம் கருதுகின்றோம்.

காலநீடிப்பு வழங்கப்பட்டபின்னரும்கூட சிறிலங்கா அரசதரப்பிலிருந்து எவ்வித முன்னேற்றமுமில்லை என்பதை உலகம் நன்கறியும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் போர்க்குற்றங்கள் மீதான விசாரணை தொடர்பிலும் எள்ளளவும் முன்னகரவில்லை. அத்தோடு தமிழ்மக்கள் மீதான அடக்குமுறை, ‘நல்லாட்சி’ போன்ற புதிய வடிவங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம். காலங்காலமாக எல்லோரையும் ஏமாற்றித் தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வந்த சிங்களப் பேரினவாத அரசு இப்போதும் அதையே தொடர்ந்தும் செய்துவருகின்றது என்பதை உலகம் நன்குணர்ந்து காத்திரமான வழியில் செயற்பட வேண்டும்.

அன்பான மக்களே!

இலங்கைத்தீவின் இனச்சிக்கலை வெறும் காணிப்பிரச்சனை, வேலைவாய்ப்புப் பிரச்சனை, தனிநபர்களின் போர்க்குற்றப் பிரச்சனை என்பதாகச் சுருக்கி, உள்நாட்டின் நிர்வாகரீதியிலான பிரச்சனையாக வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பு என்ற வடிவத்தை நோக்கி பேரினவாத அரசு நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கையை நிறைவு செய்யாத, பேரினவாத சக்திகளிடமிருந்து எவ்வித பாதுகாப்பையும் தமிழருக்கு வழங்காத இந்த அரசியல் யாப்பைத் தமிழ்மக்களின் ஆதரவோடு நிறைவேற்றிவிட மிகப்பெரிய சதித்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தமிழ்மக்களின் நியாயமான அரசியல் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் சிங்களப் பேரினவாத அரசின் இந்த நிகழ்ச்சி நிரலிற்கு தமிழ்த் தலைவர்கள் என்று கூறுபவர்கள் பலியாகிவிட்டனர். நெருக்கடி நிறைந்த இந்தச் சூழலில் சுயலாப அரசியல் சக்திகளையும் அரசியல் சந்தர்ப்பவாதங்களையும் இனங்காணத்தவறினால் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்கள் ஆவோம்.

தமிழரின் தேவை என்ன என்பதை காலத்துக்குக் காலம் தமிழர்கள் தெளிவாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான தமிழரின் ஆணையைத் தொடர்ந்து, அக்கோரிக்கையை வலுவிழக்கச் செய்யவும், இனிமேல் அப்படியான கோரிக்கைகள் எழாமலிருக்கவும் அரசியல் யாப்பில் திருத்தம் செய்து அதுவரையிருந்த கருத்துச் சுதந்திரத்தையும் பறித்தது பேரினவாத அரசு. அதன்பின்வந்த காலங்களில் ஆயுதப்போராட்ட வலுவின்மூலம் பெறப்பட்ட சமனிலையின் அடிப்படையில் சிறிலங்கா அரசியல் யாப்பின் அடக்குமுறைக் கரங்களுக்கு அப்பால் நின்று விடுதலை இயக்கங்களும் அரசியற்கட்சிகளும் தமிழ்மக்களின் சார்பில் முன்வைத்த திம்புக்கோட்பாடு ஒரு வரலாற்றுப் பதிவு. அதன்பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்மக்களின் அரசியல் வேட்கையைத் தொடர்ந்தும் சமரசமற்று வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவின்பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையைச் சாதகமாக்கி தாங்கள் விரும்புகின்ற ஒரு நிர்வாகக் கட்டமைப்பை அரசியல் தீர்வாகக் காட்டி தமிழ்மக்களின் தலையில் கட்டிவிட சிங்கள அரசு முயற்சிக்கின்றது. இதற்கு பன்னாட்டுச் சமூகமும் தமிழ்த்தலைவர்கள் சிலரும் உடன்போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைத்தீவில் நிகழ்ந்த இத்தனை அழிவுகளுக்கும் மூலகாரணமான சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையை வலுப்படுத்தும் நோக்கில் வரையப்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய யாப்பை தமிழரின் ஆதரவுடனேயே வெற்றிபெற வைக்கும் சூட்சும விளையாட்டையே இன்றைய பேரினவாத அரசு முன்னெடுக்கின்றது. இந்த யாப்பில் தமிழரின் உரிமைகள் உறுதிசெய்யப்படாது என்பதை அரசுத் தலைவர்கள் சிங்கள மக்களுக்கும் பௌத்த பேரினவாதிகளுக்கும் வழங்கும் உறுதிமொழிகளும், அண்மையில் வெளிவந்த இடைக்கால வரைபு அறிக்கையும் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.

இதுவரை நிகழ்ந்த சிறிலங்கா அரசியல் யாப்பு உருவாக்கங்கள் எவற்றிலும் தமிழ்த்தரப்பு பங்கேற்றதில்லை. உடன்படாத யாப்புச் சீர்திருத்தத்தைப் புறக்கணித்த வரலாற்றையும் தமிழ்மக்கள் கொண்டிருக்கிறார்கள். இதுவரையான தமிழர் விரோத யாப்புக்கள் தமிழர்களின் ஆதரவின்றியே நிறைவேற்றப்பட்டன. இந்த வரலாற்றுச்சுவடுதான் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டையும் தேவையையும் உலகின்முன் வைக்கும் நேர்மையை எமது இனத்துக்குத் தந்திருக்கிறது. தமிழினத்தின் இறைமையைச் சிங்கள தேசம் பறித்துக்கொண்டதேயன்றி, தமிழினம் தாமாகவே தாரைவார்த்துக் கொடுக்கவில்லை. இந்த வரலாற்று நியதியை இதுவரையான தமிழர்களின் யாப்புப் புறக்கணிப்பே தக்கவைத்திருக்கின்றது.

ஆதலால், தமிழர்விரோதப் போக்கைப் பேணியபடியே தனது சிங்களப் பௌத்த பேரினவாதச் சிந்தனையை வலுப்படுத்தும் நோக்கோடு வரையப்படும் இந்த அரசியல் யாப்பு விடயத்திலும் தமிழினம் தனது தீர்ப்பைச் சரியாக வழங்குமென்று நம்புகின்றோம். மக்களுக்காக மரணித்த ஆயிரமாயிரம் மாவீரச்செல்வங்களின் அர்ப்பணிப்புக்களை எமது மக்கள் ஒருபோதும் வீணாகிப்போக விடமாட்டார்கள்.

அன்பான புலம்பெயர்ந்த உறவுகளே,

இன்று உலக அரசியல் ஒழுங்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. ஒருபுறம் கடும்போக்குவாத, பழமைவாத சக்திகளும் சித்தாந்தங்களும் அரசியல் வெற்றியைப் பெற்றுவருகின்றன போன்ற தோற்றம் நிலவுகின்றது. அதேவேளை, மறுபுறத்தில் முற்போக்குவாத சக்திகளும் அரசியல் எழுச்சியைப் பெற்றுவருகின்ற நிலைமையை மேற்குலகில் பார்க்கின்றோம். உலக ஏதிலிகள் சிக்கல், மனித அவலங்கள், பொருளாதாரச் சிக்கல், உலகமயமாதல் போன்றன அதிகளவுக்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளாகிவிட்டன. அரசியலுக்காக உருவாக்கப்பட்ட, பொதுமைப்படுத்தப்பட்ட பயங்கரவாதச் சிக்கலின் உண்மை முகத்தை இன்று உலகநாடுகள் அறியத்தொடங்கியிருக்கின்றன. இந்தப் பொதுமைப்படுத்தலின் தவறை முற்றுமுழுதாக உலகநாடுகள் அறிந்துகொள்ளும்வேளை ஒருநாள் கைகூடிவரும். இந்தப் பயங்கரவாதப் பொதுமைப்படுத்திலின் விளைவாக வஞ்சிக்கப்பட்ட எமது இனவிடுதலைப் போராட்டத்தின் நியாயமும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருநாள் வந்தே தீரும்.

உலகில் இன்றும் இனவிடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன. அவ்வப்போது புதிய தேசங்கள் பிறந்தவண்ணம்தான் உலகவரலாறு நகர்ந்துகொண்டிருக்கிறது. எத்தகைய இடர்கள் வந்தபோதும் போராட்டத்தைத் தக்கவைத்த இனங்கள், வரலாற்றில் கிடைத்த வாய்ப்புகளில் வெற்றியடைந்தவண்ணம் இருக்கின்றன. பலத்த எதிர்ப்புகளுக்கிடையிலும் தமக்கான இறைமை வேட்கையைப் பொதுவாக்கெடுப்பு மூலம் ஈரினங்கள் வெளிப்படுத்திய நிகழ்வுகள் மிக அண்மைய எடுத்துக்காட்டுகளாகும். தனித்தேசமாக அவர்கள் இன்னும் தமது இலக்கை அடையவில்லையாயினும் அவர்களின் போராட்டத்தில் இதுவொரு அசைக்கமுடியா மைற்கல் என்பது திண்ணம். இந்நேரத்தில் ஈராக்கிய குர்திஸ் இனத்தாருக்கும், கற்றலோனிய மக்களுக்கும் அவர்களைப் போலவே இனவிடுதலைக்காக அயராது போராடுகின்ற தமிழினத்தின் சார்பில் நாம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றைய காலத்தின் தேவைகருதி உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது விடுதலைப் போராட்டத்தைப் புதிய பரிமாணத்தில் விவேகமாக முன்னகர்த்திச் செல்லவேண்டிய வரலாற்றுப் பணி எமக்குள்ளது.

எத்தனையோ இடர்களுக்கிடையிலும், அடக்குமுறைகளுக்கிடையிலும் எமது மக்கள் தாயகத்தில் தமது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகிறார்கள். காணி அபகரிப்பு, அரசியற் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டங்கள் உட்பட பல தளங்களில் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டங்களையும் தமிழின அழிப்புக்கு நீதிவேண்டி அனைத்துலக விசாரணைக் கோரிக்கையையும் உலகமட்டத்தில் எடுத்துச்செல்லவேண்டிய பொறுப்பும் சர்வதேச ஆதரவைத் திரட்டும் கடமையும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தையே சாரும். குறிப்பாக, தமிழ் இளையோரின் அர்ப்பணிப்புடன்கூடிய பங்களிப்பு மிகமிக அவசியமாகும்.

எமது இயக்கம் மீதான தடையும் எம்மைப் பயங்கரவாதிகளாக நோக்கும் மனப்பாங்கும் தமிழரின் உரிமைப் போராட்டத்தை மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் ஆழமாகப் பாதித்து வருகின்றன. இந்த நீதிக்குப் புறம்பான தடையை, எமது மக்களை அழிப்பதற்காக மட்டுமே சிங்கள இனவாத அரசு பயன்படுத்துகிறது என்பதைப் பன்னாட்டுச் சமூகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தடையால் இலட்சக்கணக்கான எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டது மட்டுமன்றி, போர் முடிவடைந்தபோதும் எமது ஆதரவாளர்களும் நீதிக்காக உழைத்துவருபவர்களும் அரசியல் பழிவாங்கலுக்கும் இலக்காகி வருகிறார்கள்.

எமது இயக்கம் மீதான தடையானது உலக நாடுகளில் எமது இயக்கத்தின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்குப் பெரும் இடையூறாக இருந்து வருகின்றது. எமது இயக்கமானது சட்டபூர்வமாக இயங்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருவதனூடாகவே எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் அரசியல் வழியில் முன்னெடுக்க உதவ முடியும். அத்தோடு இலங்கைத்தீவு தொடர்பில் ஒரு வலுச்சமநிலையைப் பேணவும் முடியுமென்ற வரலாற்று நியதியையும் உலகம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று இந்நேரத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான தமிழக உறவுகளே!

தமிழ்த்தேசியம், தமிழ்மொழிக் காப்பு, சமூகநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான வரலாற்றைக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டக் குழுந்தையைத் தொட்டிலாட்டி வளர்த்துவிட்ட காலத்திலிருந்து இன்றுவரை எமது மக்களின் உரிமைப்போராட்டத்துக்கான உந்துசக்தியாக என்றும் இருந்து வந்திருக்கிறீர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான உலகஆதரவின் திறவுகோல் நீங்கள்தாம் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்களது அயராத உழைப்பும் ஆதரவும் எமக்கு வேண்டுமென்பதை இந்நேரத்தில் மீளவும் பதிவு செய்ய விளைகின்றோம்.

அன்பான தமிழ்பேசும் மக்களே,

உலக வரலாறு என்றும் உருண்டுகொண்டே இருப்பதுதான். இந்த வரலாற்றில் எண்ணற்ற அழிவுகளும், மீட்சிகளும், எழுச்சிகளும் ஒவ்வோர் இனத்திலும் நிகழ்ந்தவண்ணமே கழிந்திருக்கின்றன. தமது எழுச்சிக்கானதும், மீட்சிக்கானதுமான போராட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருந்த இனங்கள் வெற்றியடைந்திருக்கின்றன.

இந்த வரலாற்று நியதிக்கமைய எங்கள் போராட்டமும் வெற்றிபெறும் நாளொன்று கனிந்துவரும். அதுவரை நாம் தொடர்ந்து போராடுவோம். தமக்கென்று எதையும் எதிர்பாராது, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த எங்கள் மாவீரச்செல்வங்களின் உயர்ந்த தியாகம் என்றும் வீண்போகாது. சத்திய வேள்வியில் ஆகுதியாகிய இந்த உத்தமர்களை நினைவுகொள்ளும் இந்நாளில், விடுதலை பெறும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.
Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
முத்துக்குமாரும் முடிவல்ல; முள்ளிவாய்க்காலும் முடிவல்ல; ஆரம்பமே!! செந்தமிழன் சீமான் (29.01.2014)
இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! – மக்கள் தீர்ப்பாயம் (17.12.2013)
விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் நினைவோடு விடுதலைக்காக செயலாற்ற உறுதி கொள்வோம்-பிரதமர் (28.11.2013)
ஆறு அறிவுபடைத்த ஊடக மனிதர்களிடம் இசைப்பிரியாவின் சகோதரி விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்! (09.11.2013)
நாம் கூட்டுப் பங்காளிகளே தவிர, குத்தகைக்காரர்களல்ல - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் (26.10.2013)
மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன் (23.10.2013)
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்- தமிழீழ அரசியல்த் துறை (20.09.2013)
புரட்சியும்,எழுச்சியும் மாணவ சமுதாயத்திடமிருந்தே தோற்றம் பெறுகின்றது -தேசியத் தலைவர் (06.06.2013)
எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம் (18.05.2013)
தமிழீழ சுதந்திர சாசன வரைபு எமது விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல் (30.04.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan