.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழத்தின் வித்துக்கள்
 
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன் 
Wednesday, 26.09.2018, 10:04am (GMT)


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவன் திலீபன். திலீபன் என்றால் தியாகம் எனத் தமிழுக்கு ஒரு புதிய அர்த்தத்தை உருவாக்கியவன். ஒரு நாளல்ல; இது நாட்களல்ல; பன்னிரு நாட்கள் நீர் கூட அருந்தாமல் அவன் மேற்கொண்ட உண்ணாநோன்பு மாபெரும் சக்தியாகத் திரண்டு மேலெழுந்தது. ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் உணர்த்தும் தீயாய்க் கொழுந்து விட்டெரிந்தது. ஒரு பிராந்திய வல்லரசின் முகமூடியைக் கிழித்து அம்பலத்தில் நிறுத்தியது!

திலீபன் ஒரு ஆயுதப் போராளி! தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திக் களமாடியவன்; எத்தனையோ தடவைகள் சிங்கள ஒடுக்குமுறை இராணுவத்துடன் மோதிக்களம் கண்டவன். முன்னேறி வந்த இராணுவத்தை வல்லவை வெளியில் தடுத்து நிறுத்திச் சமராடி விழுப்புண் அடைந்தவன். போர்க்களம் அவனுக்கு ஒரு விளையாட்டுத்திடல், எதிரிகளைப் பந்தாடுவது அவனால் அடிக்கடி எட்டப்படும் இலக்கு.

எனினும் -

அவன் நல்லூர் வீதியில் இந்திய வல்லரசுடன் அஹிம்சைப் போர் தொடுத்தான். காந்தீய தேசத்துடன் காந்தீய வழியிலேயே சமராடினான்.

ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை மூலம் வடமராட்சியை நோக்கி நரபலி வேட்டையை நடத்தியவாறு முன்னேறிய சிங்களப் படையினரை விடுதலைப்புலிகள் பல்வேறு முனைகளில் தடுத்து நிறுத்திப் போராடினர். கிடுகு வேலிகளும் பனை வடலிகளும் கூட ரவைகளை உமிழ்ந்து சிங்களச் சிப்பாய்களின் உயிர்களைக் குடித்தன. ‘அவ்ரோ’ விமானங்கள் பொழிந்த குண்டு மழையின் நடுவில் நின்று, எறிகணைச் சிதறல்களிடையே புகுந்து விடுதலைப் புலிகள் வீரசாதனை படைத்தனர்.

அங்குலமங்குலமாகப் பேரிழப்புக்களுடன் முன்னேறிய இராணுவம் நெல்லியடி மத்தியகல்லூரியில் மேலும் முன்னேற முடியாது நிலை கொண்ட போது ‘மில்லரின்’ கரும்புலித் தாக்குதல் இலங்கைப் படையை ஈடாட வைத்தது. மன வலிமையை முற்றிலும் இழந்து தடுமாறியது இலங்கை இராணுவம்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஓடிப்போய் இந்தியாவின் காலில் விழுந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. தமிழ் மக்களைப் பாதுகாப்பது என்ற பேரில் எமது தாயக மண்ணில் கால் பதித்தது இந்திய அமைதிப்படை!

விடுதலைப் போராளிகளின் ஆயுதங்களைக் களைவது முதல் சிங்களக் குடியேற்றங்கள் வரை இலங்கை அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் ஆயுதமாகச் செயற்பட்டது இந்திய அமைதிப்படை. தமிழ் மக்களைப் பாதுகாக்க வந்ததாகக் கூறிய இந்தியப் படை தன் நடவடிக்கைகளை தமிழர்களுக்கு எதிராகவே திருப்பியது.

தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தோளில் சுமந்த விடுதலைப் புலிகள் இந்தச் சதியை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டனர். இந்தியாவுடன் அஹிம்சைப் போர் தொடுப்பதாக முடிவெடுத்தனர் விடுதலைப்புலிகள்.

நல்லூர் வீதியில் அமைக்கப்பட்ட மேடையில் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, அன்னையொருத்தி பொட்டுவைத்து ஆசீர்வதித்த திலீபன். உண்ணாவிரதப் போரைப் பிரகடனம் செய்தான்.

தமிழீழமே நல்லூர் வீதியில் திரண்டது. அலை மோதும் மக்கள் வெள்ளத்தின் உணர்வெழுச்சி வீசும் காற்றையே அதிரவைக்கப் போர் தொடர்ந்தது. உணவு மட்டுமல்ல நீர் கூட அருந்தாத வீரப் போர் அது! நாட்கள் நகர நகர திலீபனின் உடல் சோர்கிறது உள்ள உறுதி மட்டும் மலையென உயர்கிறது.

மூன்றாம் நாள் – உடல் வாடிய நிலையிலும் அவன் குரல் உயர்கிறது!

வீரத்தினதும் தியாகத்தினதும் வெளிப்பாடாக அவனின் உரை முழங்குகிறது! எமது மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மேலும் அவன் கொண்ட நம்பிக்கை வார்த்தைகளாக வெடிக்கிறது!

“மலரப் போகும் தமிழீழத்தை நான் வானிலிருந்து பார்ப்பேன்” அந்த வார்த்தைகள் விண்ணில் பரவி 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அவை  தமிழ் மக்களின் நெஞ்சங்களில் எதிரொலிக்கின்றன.

திலீபனும் விடுதலைக்காகத் தம்மை  அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களும் மலரப் போகும் தமிழீழத்திற்காக வான மண்டலத்தில் நட்சத்திரங்களாக மாறி காத்துக்கிடக்கிறார்கள். அவர்களின் அந்த ஒப்பற்ற நம்பிக்கை ஒவ்வொரு தமிழனின் குருதியிலும் கலந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நாட்களை எதிர்பார்த்து குமுறிக்கொண்டிருக்கிறது.

திலீபனின் உண்ணாநோன்பை இடைநிறுத்த எத்தனோ மருட்டல்கள்! எத்தனையோ மிரட்டல்கள்! எத்தனையோ தாளங்கள். எவற்றாலும் அந்தப் புலி வீரனின் உறுதியை அசைக்க முடியவில்லை!

நாட்கள் நகர்ந்தன!

ஐந்தம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை!

இது தனது வல்லாதிக்க நோக்கத்தை தானே அம்பலப்படுத்துகிறது.

பன்னிரண்டாம் நாள்!

நல்லூர் வீதியில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் கதறியழ ஒரு தியாக வேள்வி நிறைவு பெறுகிறது! திலீபனின் உயிர் மெல்ல மெல்ல மேலெழுந்து காற்றில் கலந்து விண்ணில் பரவுகிறது! ஆதவன் சிவந்து தன் அஞ்சலியைச் செலுத்தினான்! காற்று கதறித் தன் கவலையை வெளிப்படுத்தியது! வானம் அழுது கண்ணீர் விட்டது!

உலகமே அழுதது! 

அது மட்டுமல்ல! சிங்களப் பேரினவாதத்தினதும் இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தினதும் உண்மை முகங்களை உலகம் கண்டு கொண்டது.

திலீபனின் தியாக வேள்வி நிறைவடைந்து 26 ஆண்டுகள் கடந்துவிட்டன! ஆனால் அதன் மகத்துவம் இன்னும் பேரொளியாக ஒளிர்ந்துகொண்டிருக்கிறது! உணர்வலைகளாக ஓங்கி அடிக்கிறது! எமது ஆயுதப்போர் முள்ளிவாய்க்காலில் மெளனிக்கப்பட்டது உண்மை! ஆனால் எமது போராட்டத்தை எவரும் தோற்கடிக்க முடியாது. எமது இலட்சியம் நிறைவேறும் வரை என்றும் குன்றா இளமையுடன் அது வீறுநடைபோடுகிறது.

ஏனெனில் -

அது தியாகி திலீபனின் தியாகத்தால் புடம் போடப்பட்டது! எமது மாவீரர்களின் அர்ப்பணிப்பில் கொழுந்துவிட்டெரிவது! இன்று நாம் ஜனநாயக வழியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். திலீபன் ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அஹிம்சைப் போரைத் தொடுத்தான். இன்று நாம் ஆயுதப் போரின் அடுத்த கட்டமாக ஜனநாயகப் போரை தொடர்கிறோம்!

அதாவது எமது போராட்டம் விடுதலைப்புலிகளின் தலைமையில் நடத்திய ஆயுதப் போராட்டத்தின் இன்னொரு வடிவம்! போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறுவதில்லை.

தியாகி திலீபனும், எமது மாவீரர்களும், எமது மக்களும் எந்தப் புனிதமான இலட்சியத்துக்காகத் தமது உயிர்களை அர்ப்பணித்தனரோ அது ஈடேறும் வரை எமது போராட்டம் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து  முன் செல்லும்.

“போராடுவது தோல்வியடைவது, மீண்டும் போராடுவது மீண்டும் தோல்வியடைவது, மீண்டும் மீண்டும் போராடுவது மீண்டும் மீண்டும் தோல்வியடைவது இறுதி வெற்றிவரை – இது மக்களின் நியதி!

“போராடுவது தோல்வியடைவது, மீண்டும் போராடுவது மீண்டும் தோல்வியடைவது, மீண்டும் மீண்டும் போராடுவது மீண்டும் தோல்வியடைவது, மீண்டும் மீண்டும் போராடுவது மீண்டும் மீண்டும் தோல்வியடைவது அவர்களின் சவக்குழி வரை – இது ஒடுக்குமுறையாளர்களின் நியதி.”

                                                                                           - சீனத்தலைவர் மா ஓ சேதுங் –


நன்றி: ஈழமுரசு அவுஸ்திரேலியா
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (1)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
வீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று! (26.09.2018)
கேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள் (25.09.2018)
திலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார் (25.09.2018)
இந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை? காணொளிகள் இணைப்பு (25.09.2018)
24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று. (24.09.2018)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின்  9ம்  நாள் இன்று. (23.09.2018)
22ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் 8ம்  நாள் இன்று.. (22.09.2018)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31 ஆம் ஆண்டின்  7ம்  நாள் இன்று..  (21.09.2018)
தமிழீழத்தில் கொண்ட உறுதியால்! இன்னமும் மயங்காமல் இருக்கிறீர்கள்! (20.09.2018)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஆறாம்  நாள் இன்று..  (20.09.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan